வியாழன், 17 செப்டம்பர், 2020

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 5 பேர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழக்கின்றனர்: மத்திய அரசு!

 இந்தியாவில் கடந்த நிதியாண்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 5 பேர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. இதனை அடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த விசாரணை காவல் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 

இந்நிலையில் கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் ஒரு நாளைக்கு 5 பேர் காவல்துறை விசாரணையின் போது  உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2020 மார்ச் 30 வரை  காவல்துறை விசாரணையில் 1,697 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1,584 பேர் நீதிமன்ற காவலில் போதும், 113 பேர் காவல்துறை கஸ்டடியிலும் உயிரிழந்துள்ளனர். 

 

நாட்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் நீதிமன்ற காவலின் போது 400 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக  மத்தியப் பிரதேசத்தில் 143 பேரும், மேற்கு வங்கத்தில் 115 பேரும், பீகாரில் 105 பேரும் பஞ்சாப்பில் 93 பேரும் மகாராஷ்டிராவில் 91 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

காவல்துறை விசாரணையை பொறுத்த வரை அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 14 பேரும் தமிழகம் மற்றும் குஜராத்தில் தலா 12 பேரும் உயிரிழந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.