காவிரி நீர் விவகாரம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதி வென்று தண்ணீர் பெற்றுத் தருவோம்- துரைமுருகன்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. அப்போது, கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செல்வதைத் தவிர தமிழ்நாட்டிற்கு வேறு வழியில்லை. விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதி வென்று, காவிரி நீரை பெற்று தருவோம் என்பதில் நமது ஆட்சி உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்
மேலும் அவர் கூறுகையில், “உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாதம் 1-ம் முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு 53.77 டி.எம்.சி தண்ணீரை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு வழங்கி இருப்பதோ 15.79 டி.எம்.சி தான். தற்போது 37.97 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறை ஆக உள்ளது.
இதன் காரணமாக தஞ்சை தரணியில் பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள். கர்நாடகாவில் இருக்கும் 4 அணைகளையும் சேர்த்து மொத்த கொள்ளளவான 114.571 டி.எம்.சி-யில் 93.535 டி.எம்.சி தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. மொத்த அளவில் 82% தண்ணீர் கர்நாடகத்தின் வசம் இருப்பில் உள்ளது.
நீர் இல்லை என்ற நிலை கர்நாடகத்திற்கு இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற மனநிலையும் கர்நாடகத்திற்கு இல்லை. எனவே உச்ச நீதிமன்றம் செல்வதைத் தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு வழியில்லை. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடர்ந்து தண்ணீரைப் பெற்றுத் தருவோம் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-to-go-supreme-court-in-cauvery-issue-minister-durai-murugan-statement-737931/