இந்தியாவில் அனைவருக்கும் கல்வித்திட்டம் 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 6 முதல் 14 வயது வரை அனைவருக்கும் கல்வி கொடுக்கும் நோக்கில் இந்த கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது.
இக்கல்வித்திட்டத்தால் மாணவர்கள் 8ம் வகுப்பு வரை நிறுத்தமே இல்லாமல் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதன்மூலம், இந்தியாவில் உள்ள குழந்தைகளின் குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு வரை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இக்கல்வித்திட்டத்தில் 8ம் வகுப்புவரை தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9ம் வகுப்பில் அதிக அளவில் தோல்வியைத் தழுவுவதாகவும், இதனால் 9ம் வகுப்போடு கல்வி இடைநிறுத்தம் செய்யும் மாணவர்களின் அளவு 20% ஆக அதிகரித்திருப்பதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, அனைவருக்கும் கல்விச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 5 மற்றும் 8 வகுப்புகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை பின்பற்றப்பட இருக்கிறது. இதில், மார்ச் மாதம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். மார்ச்சில் தோல்வியுற்ற மாணவர்கள் மே மாதம் மீண்டும் தேர்வு எழுதலாம். மே மாதமும் தோல்வி அடைந்தால் மீண்டும் 5 வகுப்போ, 8ம் வகுப்போ படிக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படும்.
இந்த சட்டதிருத்தத்தை மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 25 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன. இந்த மாநிலங்களில் 2018 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிடும்.
தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்கள் மட்டும் இதை உடனே நடைமுறைக்கு கொண்டு வராது எனத் தெரிகிறது.
இந்த சட்டத்திற்கு சில கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கல்வித்திட்டம் மாணவர்களின் உளவியலை மோசமாக பாதிக்கும் என்றும், 5 ம் வகுப்பிலேயே பலர் கல்வியை விட்டுவிடுவார்கள் என்றும் எச்சரிக்கிறார்கள்.