சனி, 26 ஆகஸ்ட், 2017

மோடி இந்தியாவுக்கு பிரதமர், பாஜகவுக்கு அல்ல - உயர்நீதிமன்ற நீதிபதிகள் விமர்சனம்! August 26, 2017

மோடி இந்தியாவுக்கு பிரதமர், பாஜகவுக்கு அல்ல - உயர்நீதிமன்ற நீதிபதிகள் விமர்சனம்!



15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த வழக்கில் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகிய குர்மீத் என்கிற சாமியார் குற்றவாளி என தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே ஹரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் கலவரங்கள் வெடித்தது. பலாத்கார சாமியார் குர்மீத்தின் தேரா சச்சா சவுடா மடத்தைச் சேர்ந்தவர்கள், குர்மீத்தின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 31 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 248 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரம் குறித்து பதிவுசெய்யப்பட்ட பொதுநல வழக்கில் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கான உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று கருத்து தெரிவித்துள்ளனர். அதில், பிரதமர் மோடி, ஹரியானா மாநில முதல்வர் கட்டார் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.சிங் சரோன், நீதிபதி அவ்னேஷ், சூர்யா கண்ட் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் வாக்குவங்கி மயக்கத்தில் அரசியல் சரணாகதி அடைந்துள்ளது ஹரியானா அரசு”என மிகக்கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் பாஜக ஆளும் ஹரியானா, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுடன் பாரபட்சமாக நடந்துகொண்டதாக அவர்கள் குறிப்பிட்டனர். மத்திய அரசு சார்பாக வழக்கை நடத்திய கூடுதல் சொலிட்டர் ஜென்ரல் சத்யபால் ஜெயினிடம், “பஞ்சாப் மாநிலமும் இந்தியாவில் தானே இருக்கிறது? ஏன் பஞ்சாப் இடமும், ஹரியானாவிடமும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்துகொள்கிறது?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், “ பிரதமர் மோடி இந்தியாவுக்கு பிரதமர், பாஜகவுக்கு அல்ல” என்றும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஹரியானா பாஜக அரசுதான் நிலைமை உச்சக்கட்டத்திற்கு செல்ல காரணம் என்றும் நீதிபதிகள் விமர்சித்தனர்.

மேலும், உச்சக்கட்ட கலவரம் நடந்த பஞ்சகுலா மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக 1.5 லட்சம் பேருக்கும் மேல் கூடுவதற்கு யார் அனுமதித்தது என்றும், அவர்களை ஏன் தடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.