சனி, 26 ஆகஸ்ட், 2017

முகப்பு > இந்தியா ​கோரக்பூரை அடுத்து கர்நாடகா மருத்துவமனையில் 90 குழந்தைகள் பலி..!! August 26, 2017

​கோரக்பூரை அடுத்து கர்நாடகா மருத்துவமனையில் 90 குழந்தைகள் பலி..!!


உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 நாட்களில் 60 குழந்தைகள் இறந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் 90 குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 90 குழந்தைகள் இறப்பு நடந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில், எஸ்என்ஆர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறக்கும் போதே 3 குழந்தைகள் இறந்தது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியுள்ளது.

இந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் 1,053 குழந்தைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 90 குழந்தைகள் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ல் இதே மருத்துவமனையில் 82 குழந்தைகள் இறப்பும் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கக் கோரி சுகாதாரத் துறைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சென்று சம்பவம் குறித்து விசாரித்து சென்றனர்.

இது தொடர்பாக மேலும் விவரங்களை திரட்டவும், உண்மை நிலையை கண்டறியவும் பாஜகவின் மூத்த தலைவரான சுரேஷ் குமார் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நியமித்துள்ளார்.