வியாழன், 31 ஆகஸ்ட், 2017

கேரளாவின் குப்பைத் தொட்டியாகும் தமிழகம்! விளக்கமளிக்க ஆட்சியருக்கு உத்தரவு! August 30, 2017

கேரளாவின் குப்பைத் தொட்டியாகும் தமிழகம்! விளக்கமளிக்க ஆட்சியருக்கு உத்தரவு!


கேரளாவிலிருந்து மின்னணு பொருட்களின் கழிவுகள், மருத்துவ கழிவுகள் கோவையில் கொட்டப்படுவதை எதிர்த்த வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து மருத்துவ, மின்னணு மற்றும் ரசாயனக் கழிவுகள் கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் உள்ள வேலுமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கொட்டப்படுவதாக கூறியுள்ளார்.

அப்பகுதியில் இது போன்ற குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், சுற்று சூழல் பாதிப்படைவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மதுக்கரை வட்டாச்சியரிடம் புகார் அளிக்கபட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வட்டாட்சியர் உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.