புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து, அடுத்தகட்டமாக ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன், ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக, புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வடிவமைக்கும் பணியும், பாதுகாப்பு அம்சங்களை வரையறை செய்யும் பணியும் தீவிரவமாக நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மைசூர் மற்றும் சல்போனி ஆகிய இடங்களில் உள்ள நோட்டு அச்சடிக்கும் மையங்களில் 1000 ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சடிப்பதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கடந்த என்ன நோக்கங்களுக்காக அதிக பண மதிப்பு மிக்க நோட்டுக்கள் நீக்கம் செய்யப்பட்டனவோ அவை இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் மீண்டும் பழைய மதிப்பில் உள்ள நோட்டுக்கள் ஏன் கொண்டு வரப்படுகின்றன என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் எவ்வளவு பணம் வங்கியில் செலுத்தப்பட்டது என்கிற முறையான அறிக்கைகூட இதுவரை அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி சுமார் 12.4 லட்சம் கோடி பணம் வங்கியில் செலுத்தப்பட்டு விட்டதாக அறிக்கை தரப்பட்டது. கடந்த ஆண்டு டிச. 11ம் தேதி அறிக்கை படி சுமார் 5.4 லட்சம் கோடி ரூபாய் பணம் புதிய 500,2000 நோட்டுக்களாக மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டதாக அறிக்கை தரப்பட்டது.
அதன்பிறகு, என்ன நிலை? எவ்வளவு பணம் வங்கியில் மக்களால் செலுத்தப்பட்டது? அரசு எவ்வளவு பணத்தை புதிய நோட்டுக்களாக விநியோகத்தது என்கிற எந்தத் தகவலும் இல்லை.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கறுப்புப்பணம் ஒழிப்பு, ரொக்கமில்லா வர்த்தகம், போலி நோட்டு ஒழிப்பு ஆகியவை நோக்கங்களாக சொல்லப்பட்டன.
இவற்றில் அரசு எந்த அளவு சாதித்திருக்கிறது என்கிற தகவலும் இல்லை. பணமதிப்பிழப்பு காலத்தில் மட்டும் பல்வேறு நெருக்கடிகள், வங்கியில் வரிசையில் நிற்கும் போது தகராறு என சுமார் 50 பேர் வரை இறந்ததாக செய்திகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் உண்மையான விளைவுகள் என்ன என்று அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்து வருகிறது.