வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

​3 மாநிலங்களை கலவர பூமியாக்கிய சாமியார் குர்மித் ராம் ரகீம்..!! August 25, 2017

​3 மாநிலங்களை கலவர பூமியாக்கிய சாமியார் குர்மித் ராம் ரகீம்..!!


பாலியல் வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிவருவதால் பதற்றம் நிலவி வருகிறது. 

கலவரத்தை அடக்கும் பணியில் காவல்துறையினருடன் 15 ஆயிரம் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் கூடுதல் படையினர் வரவவழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேரா சச்சா சவுதா அமைப்பினர் 3 மாநிலங்களிலும் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

கலவரத்தில் இதுவரையிலும் 17 பேர் இறந்துள்ளனர், 200க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். கண்ணீர் புகை குண்டு, தண்ணீர் பீய்ச்சி அடிப்பது, தடியடி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல் என பல்வேறு வழிகளிலும் கலவரத்தை அடக்க காவல்துறையுடன் துணை ராணுவப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில் கலவரத்தில் நடந்துள்ள பாதிப்புகள்:
 
  • கலவரத்தில் 17 பேர் பலி, 200க்கும் மேற்பட்டோர் காயம்.
  • தீர்ப்பு வெளியான ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நகரில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்தது. தொலைக்காட்சி வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.
  • கலவரத்தை ஒடுக்க கூடுதல் பாதுகாப்புப் படையினர் ஹரியானா விரைகின்றனர்.
  • வன்முறையை அடுத்து ஹரியானாவில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்.
  • வன்முறையை அடுத்து ஹரியானாவில் 5 மாவட்டங்கள் உட்பட பஞ்சாபிலும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்.
  • கலவரம் பரவாமல் தடுக்க உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
  • மாலவுட் ரயில்வே நிலையம், சில பெட்ரோல் பங்குகள் தீ வைத்து எரிப்பு.
  • டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு தீ வைப்பு, பேருந்துகளுக்கும் தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து.
  • முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இரண்டு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மூடல்.
  • ஹரியானா மாநிலம்  முழுவதும் (சர்வதேச நிறுவனங்கள் நீங்கலாக) மொபைல் சேவை ரத்து.
  • பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு தீ வைப்பு சம்பவம் நடந்ததால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு மாநில முதல்வர்களுடனும் கலந்து பேசி கூடுதல் பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
  • கலவரத்தால் ஏற்பட்டுள்ள இழப்பீடுகளை பெற சாமியார் குர்மித் ராம் ரஹீம்-ன் சொத்துக்களை காபந்து செய்ய ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர்நீதிமன்றங்கள் அறிவுறுத்தியுள்ளன.
  • நீதிமன்ற காவலில் உள்ள ராம் ரகீம் வன்முறை சம்பவங்கள் காரணமாக ரோஹ்தக் காவல் பயிற்சி பள்ளிக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். 
  • கலவரத்தில் ஈடுபட்ட 1000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.