வியாழன், 31 ஆகஸ்ட், 2017

தமிழகத்தில் ஆளுநர் அல்லோகல வரலாறு! August 31, 2017

தமிழகத்தில் ஆளுநர் அல்லோகல வரலாறு!


தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் ஆளுநரின் நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த குழப்பம் இப்போது முதல்முறையாக எழுந்த ஆச்சரியம் இல்லை. தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் பல முறை ஆளுநர்களாலும், ஆளுநர்களை வைத்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளது. அவற்றைக் குறித்த எளிய அறிமுகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலை அமலுக்கு வந்து, திமுக அரசைக் கலைப்பதென முடிவெடுத்தபோது, ஆளுநரிடம் இருந்து அறிக்கை கோரியது இந்திராகாந்தி அரசு. அதற்கு கே.கே. ஷா மறுத்ததாகவும் பிறகு வேறுவழியின்றி அறிக்கையில் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆட்சிக் கலைப்புக்குப் பிறகு பிரபுதாஸ் பட்வாரி ஆளுநரானார்.

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது ஆளுநர் குரானா, பேச முடியாத, முழுமையாகச் செயல்பட முடியாத ஒருவருக்கு எப்படி முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்துவைப்பது என்று கேட்டார். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆரின் நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும் ஆளுநரிடம் தரப்பட்டன. அதன் பிறகும் ஆளுநர் திருப்தியடையவில்லை. எம்ஜிஆர் தமிழகம் திரும்பியதும், அவரை நேரில் சென்று பார்த்த பிறகே சமாதானம் ஆனார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்திருந்த நேரத்தில் பி.சி.அலெக்ஸாண்டர் ஆளுநர் ஆனார். அலெக்சாண்டருடன் காங்கிரஸ் கட்சியினர் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அதிமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு உடனே தேர்தல் நடத்தப்படவில்லை. ஆளுநர் கண்காணிப்பில் குடியரசுத்தலைவர் தேர்தல் நடந்தது. காங்கிரஸைத் தேர்தலுக்குத் தயார்ப்படுத்தும் காரியத்தில் ஆளுநர் மறைமுகமாக ஈடுபட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. 

பீஷ்மநாராயண் சிங் ஆளுநராக இருந்த போது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவு மீது ஊழல் புகார் குற்றம்சாட்டியதோடு, அவர் மீது வழக்கு தொடுக்க அனுமதி கோரினர் எதிர்க்கட்சியினர். அந்தக் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். ஜெயலலிதாவின் நட்பு காரணமாக ஆளுநர் செயல்பட மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

 2001-ல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் பாத்திமா பீவி. மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஒருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாத்திமா பீவியின் செயல் தவறானது என்று தீர்ப்பு வரவே, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஜெயலலிதா. அந்தத் தீர்ப்பு வெளியானபோது, ஆளுநர் பொறுப்பில் பாத்திமா பீவி இல்லை.