வியாழன், 31 ஆகஸ்ட், 2017

"கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவே Demonetisation நடவடிக்கையா?" August 30, 2017




பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மத்திய அரசு எதிர்பார்த்தது போன்று பெரிய பலன் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வல் இது வெளிப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 8ம் தேதி இரவு திடீரென தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு முதல் செல்லாது என அறிவித்தார். வங்கிகளில் நோட்டுகளை மாற்றுவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. இந்த திடீர் நடவடிக்கையால் புழக்கத்தில் இருந்த சுமார் 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தன.

மக்கள் தாங்கள் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் வேலைகளை விட்டு கடும் வெயிலிலும் காத்துக்கிடந்தனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். நாடே நெருக்கடி நிலையில் சிக்கித்தவிப்பது போன்ற நிலை உருவானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கள்ளப்பணம் மற்றும் ஊழலை ஒழிக்கவே இந்நடவடிக்கை என மத்திய அரசு விளக்கம் அளித்த போதிலும், பொருளாதார வல்லுநர்கள் பலரும் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பொருளாதார நிபுணருமான ப.சிதம்பரம் இது முட்டாள்தனமான நடவடிக்கை என்று பகிரங்கமாகவே பேசினார். கருப்புப் பணம் என்பது பணமாக 5% கூட இல்லையென்றும், நிலம், தங்கம் என முதலீடாகவே 95% கருப்புப்பணம் உள்ளதால் அதை ஒழிக்க இந்நடவடிக்கை பலன் தராது என பல்வேறு பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99% வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவிக்கை தெரிவிக்கிறது. வெறும் 1% அளவு ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்பவில்லை. இந்நடவடிக்கையால் பெரிய அளவில் நட்டமே ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இதனிடையே, பெரும்பான்மையான பணம் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளதால் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டதா எனவும் ப.சிதம்பரம் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.