செப்சிஸ் நோய் என்பது பிறந்த குழந்தைகளின் உடலில் ஏற்படும் பாக்டீரியா தொற்று தாக்குதலாகும். உலகம் முழுவதும் நடக்கும் பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் விகிதத்தில் இந்த செப்சிஸ் நோய் காரணமாக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகமாகும்.
பிறந்தவுடன் இறந்துவிடும் பச்சிளம் குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் ஆகும். இதில், 33% அதாவது 6.5 லட்சம் இறப்புகள் செப்சிஸ் நோய் தாக்குதலால் மட்டும் நடக்கிறது.
இந்நிலையில், இந்த நோய் தாக்குதலில் இருந்து குழந்தைகளை காப்பது தொடர்பான ஆய்வில் அமெரிக்காவின் ஒமாகாவில் உள்ள நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையம் ஈடுபட்டது.
இந்தியாவில் இந்த செப்சிஸ் நோயின் தாக்கம் அதிகம் உள்ள ஒரிசா மாநிலத்தில் கடந்த 2008 முதல் 2012 வரை ஆய்வு செய்துள்ளனர். சுமார் 149 கிராமங்களில் 4,556 குழந்தைகள் தலா 60 நாட்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆய்வின் மூலம், தாய்ப்பால் கொடுப்பதால் செப்சிஸ் நோயின் தாக்கத்தால் நிகழும் 40% குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர். மேலும், ஆய்வின் முக்கிய நிகழ்வாக இந்த பாக்டீரியா தாக்குதலில் இருந்து குழந்தைகளை காப்பதற்கு சின்பயோட்டிக் மருந்துமுறையால் செப்ஸிஸ் நோய் தாக்கம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட 60 நாட்களில் சின்பயோட்டிக் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளின் நோயின் தாக்கம், இறப்பு 5.4% ஆகவும், கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு 9% ஆகவும் இருந்துள்ளது. இந்த மருந்தின் விலை 70ரூபாய் ஆகும்.
இந்த மருந்தின் அடிப்படையில், குழந்தைகளுக்கான செப்ஸிஸ் நோய் தாக்கம் குறித்து ஆய்வு செய்யவும், இந்த ஆய்வு முடிவை ஏற்றுக்கொள்ளவும் இந்திய மருந்து ஆராய்ச்சி குழு முடிவுசெய்துள்ளது.