புதன், 30 ஆகஸ்ட், 2017

அறுவை சிகிச்சையின் போது சண்டையிட்ட மருத்துவர்களால் இறந்து பிறந்த குழந்தை August 30, 2017

அறுவை சிகிச்சையின் போது சண்டையிட்ட மருத்துவர்களால் இறந்து பிறந்த குழந்தை


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மகப்பேறு அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் இருவர் சண்டையிட்டனர். உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாத காரணத்தினால் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த பச்சிளம் குழந்தை இறந்து பிறந்தது. 

ஜோத்பூர் அருகே உள்ள Umaid மருத்துவமனையில் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பெண் சுயநினைவை இழந்து இருந்த நேரத்தில், அறுவை சிகிச்சை அறையில் இருந்த இரண்டு மருத்துவர்களுக்கு இடையே சிகிச்சை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இரு மருத்துவர்களும் மகப்பேறு அறுவை சிகிச்சையைக் கைவிட்டுவிட்டு ஆவேசத்தோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


மருத்துவர்கள் இருவரும், பின்னர் வாக்குவாதத்தை  முடித்துக்கொண்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் அந்த பெண்ணின்  வயிற்றில் இருந்த குழந்தை இறந்து பிறந்துள்ளது. 

மகப்பேறு அறுவை சிகிச்சையை விட்டுவிட்டு, மருத்துவர்கள் சண்டையிட்டதால் குழந்தை இறந்து பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு மருத்துவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவர்கள் சண்டையிட்ட காட்சியை, அறுவை சிகிச்சை கூடத்தில் இருந்த ஊழியர் ஒருவர் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.  இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக இன்று பிற்பகல் 2 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.