வியாழன், 31 ஆகஸ்ட், 2017

யுத்த பூமியான “புத்த பூமி” : 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை! August 30, 2017

யுத்த பூமியான “புத்த பூமி” : 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை!


இலங்கையை போன்று  மற்றுமொரு புத்த பூமி  யுத்த பூமியாக மாறி இருக்கிறது. ஆம்.மியான்மரின் பெரும்பான்மை புத்த மதத்தினருக்கும் சிறுபான்மையினராக இருக்கும் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில் 3,000-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளது...

ஏன் வன்முறை வெடித்தது... அதன் பின்னணி வரலாறு என்ன ?

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் புத்த மதத்தினருக்கும், ரோஹிங்கிய இஸ்லாமிய மக்களுக்கும் இடையே இனமோதல் அதிகரித்துள்ளது. பெரும்பான்மை புத்தமதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ராக்கைன் மாநிலத்தில் 2016ம் ஆண்டு,  ஏ.ஆர்.எஸ்.ஏ எனப்படும் Arakan Rohingya Salvation Army உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இருப்பவர் அதா உல்லா. இந்த அமைப்பு மியான்மர் ராணுவத்தினர், போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

ரோஹிங்கிய இஸ்லாமிய மக்களை பாதுகாப்பது நோக்கம் என இந்த அமைப்பு கூறுகிறது. ஜிகாத் அமைப்புகளுடன் அதா உல்லா தொடர்புடையவர் என்று மியான்மர் அரசு குற்றம்சாட்டி வருகிறது. மியான்மரில் இருந்து ராக்கைன் மாநிலத்தை பிரித்து தனிநாடாக உருவாக்க முயற்சிக்கிறது என்பது மியான்மர் அரசு இந்த அமைப்பு மீது வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு. மேலும், ரோஹிங்கிய மக்கள் வங்கதேசத்தில் இருந்து மியான்மருக்குள் அத்துமீறி புகுந்தவர்கள் எனக் கூறி அவர்களுக்கான உரிமைகளை வழங்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. 





கடந்த வெள்ளிக்கிழமை ஏ.ஆர்.எஸ்.ஏ குழுவினர் ராக்கைன் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.  இதையடுத்து புத்தர் மதத்தினருக்கும் - இஸ்லாமியர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது. ராணுவத்தினரும் ரோஹிங்கிய மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் ஏ.ஆர்.எஸ்.ஏ குழுவைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. 





ரோஹிங்கிய இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு மியான்மர் ராணுவத்தினர் தீ வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, உயிருக்கு பயந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள்,  வங்கதேசத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் மியான்மரையும் வங்கதேசத்தையும் பிரிக்கும் எல்லையாக நாஃப் நதி இருக்கிறது. இந்த நதிக்கரையில் தான் முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரிலிருந்து வரும் அகதிகளுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டானியோ கட்டாரஸ் வங்கதேசம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். 1990-ம் ஆண்டு முதல் ராக்கைன் மாநிலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருகிறது. ஏற்கனவே வங்கதேசத்தில் 4 லட்சம் ரோஹிங்கிய இஸ்லாமிய மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். 

மியான்மரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையைக் கட்டுப்படுத்த ஐ.நா. தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வங்கதேசம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பிரிட்டன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாகக் கூட்ட கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மர் வன்முறையை செயற்கைக் கோள் புகைப்படங்களைக் கொண்டு ஆராய்ந்து வருவதாக ஐ.நா. மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது. 





இதனிடையே, மியான்மரில் 2,000 முதல் 3,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக The European Rohingya Council தெரிவித்துள்ளது. இன அழிப்பை தடுக்க உலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது. “மெதுவாக எரிக்கப்படும் இனப்படுகொலை” என மியான்மர் இன அழிப்பை அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், மியான்மர் ராணுவத்தின் கைகளே இந்த இனப்படுகொலையில் அதிகம் எனவும் The European Rohingya Council தெரிவித்துள்ளது.