மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர் அதிகாரம் பல்வேறு காலகட்டத்தில் இந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 1967முதல் இந்த சர்ச்சை நீடிக்கிறது. ஆளுநரின் அதிகாரம் குறித்து பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1970ல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக முதல்வர் கருணாநிதி அமைத்த ராஜமன்னார் குழு அளித்த அறிக்கை, 1988ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட சர்க்காரியா குழு அறிக்கை, 2002ம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்ட மறுஆய்வு குழு, 2007ல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட புஞ்சி குழு அறிக்கை ஆகியவை ஆளுநருக்கான அதிகாரம் குறித்து அறிக்கை அளித்துள்ளன. அவற்றில் முக்கியமான பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
புஞ்சி கமிஷன், 2007
பாராளுமன்றத்தில் குடியரசுத்தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சட்டம் உள்ளது போல மாநிலத்தில் ஆளுநருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிகாரம் வழங்க வேண்டும்
அரசியலமைப்பு மறுஆய்வு குழு, 2002
ஆளுநர் என்பவர் நேரடியாக குடியரசுத்தலைவரால் அல்லாமல் மாநில முதல்வர், இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர், பாராளுமன்ற சபாநாயகர் அடங்கிய குழுவால் நியமிக்கப்பட வேண்டும்
ராஜமன்னார் குழு, 1970
ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ஏஜெண்டாக அல்லாமல், மாநில அரசின் தலைவராக இருக்க வேண்டும்
சர்க்காரியா குழு, 1988
மாநிலத்தில் அரசியல் பிளவு இருந்தால் ஆளும் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்று அத்தனை வாய்ப்புகளை ஆராய்ந்து ஆளுநர் உறுதிசெய்ய வேண்டும். மறுதேர்தலைத் தவிர வேறு வழி இல்லை என்றால் நடப்பில் இருக்கும் அரசை காபந்து அரசாக இருக்கப் பணிக்க வேண்டும்