பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் தங்கத்திற்கான தேவை மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.
2016, நவ.8ம் தேதி 500,1000 நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன்காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கிப் போயின. ஆனால், தங்கத்தின் தேவை மற்றும் முதலீடு மட்டும் 2015-ஐ விட 2016 செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் அதிகரித்தது. 2015 செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் 176 டன்னாக இருந்த தங்கத்தின் தேவை, 2016 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 182.5 டன் ஆக உயர்ந்தது.
இதனையடுத்து, 2017ம் ஆண்டு முதல் மூன்று மாதங்களிலும் தங்கத்தின் தேவை உயர்ந்தது. இந்த காலகட்டத்தில், 2016ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இருந்ததைவிட 15% தங்கத்தின் தேவை அதிகரித்திருந்தது. தற்போது, ஏப்ரல் - ஜுன் வரையிலான காலகட்டத்திலும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டு இருந்ததைவிட 37% அதிகமான தங்கம் கடந்த 3 மாதங்களில் தேவைகூடியுள்ளது.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு காரணமாக தங்கத்தின் விலை உயரும் என்று நினைத்ததன் காரணமாகவும், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே அதிக தங்கம் வாங்கியதும் இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவிய காலகட்டத்திலும் தங்கத்தின் தேவை கூடியிருப்பது தங்கம் பதுக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.