வெள்ளி, 1 ஜூன், 2018

இந்தியாவில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்திய கொடிய நோய்கள்! May 31, 2018

Image

தற்பொழுது, நிபா வைரஸ் காய்ச்சல் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சில கொடிய நோய்கள் பற்றி பார்க்கலாம்...

ஆந்த்ராக்ஸ்:

2001ம் ஆண்டில், இந்தியா, ஈராக் போன்ற நாடுகளில் பெருமளவு அச்சத்தை ஏற்படுத்திய கொடிய நோய் ஆந்த்ராக்ஸ். பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற நுன்ணுயிரியால் ஏற்படும் இந்த நோய் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் நோய் ஆகும். 

காற்றின் மூலமாகவோ, தொடுதலின் மூலமாகவோ பரவாதபோதிலும், ஆந்த்ராக்ஸ் நோயின் பாதிப்பு, ஆசியா போன்ற நாடுகளில் மிக அதிக அளவில் இருந்தது. ஒரு ஆண்டுக்கு, சுமார் 2000 மக்கள் உலக அளவில் ஆந்த்ராக்ஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், ஆந்த்ராக்ஸ் பாதிப்படைந்தவர்களில் 20 லிருந்து 80 சதவிகித மக்கள், சரியான மருத்துவ சிகிச்சை இல்லாமல் இறந்துவிடுகின்றனர். ‘உயிரிப்போர் முறை’ என்ற முறையில் நோய் கிருமிகளை ஏவி, மற்றொரு நாட்டை தாக்கும் திட்டத்தில் ஆந்த்ராக்ஸை பயன்படுத்தலாமா என்பது குறித்து அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகின்றனர் என்பது அதிர்ச்சிகரமான தகவலாக இருக்கிறது.

சிக்குன்குனியா:

2006ம் ஆண்டில் தமிழகம், கேரளா போன்ற பகுதிகளில் மிக அதிகமாக பரவிய காய்ச்சல் சிக்குன்குனியா. 

சிக்குன்குனியா வைரஸ் தாக்குதலால் பரவும் இந்த நோய் ஏற்பட்டால், மூட்டு வலி மற்றும் காய்ச்சல் ஏற்படும். கொசுக்கடியின் மூலம் மிக அதிக அளவு பரவும் இந்த நோய், ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்தும்.

ஒரு ஆண்டிற்கு 6 கோடிக்கு அதிகமான மக்கள் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2006ம் ஆண்டில், கேரளாவில் மட்டும் நூற்றுக்கணக்கு மேற்பட்ட மக்கள் சிக்குன்குனியாவால் பாதிப்படைந்து உயிரிழந்ததாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்தது. அதே போல், இலங்கையில் சுமார் ஒரு லட்சம் மக்கள் சிக்குன்குனியாவால் பாதிப்படைந்ததாக தகவல் வெளியானது. 

பன்றி காய்ச்சல்

2015ம் ஆண்டு, தமிழகத்தை அச்சுறுத்திய நோயாக பன்றி காய்ச்சல் நோய் இருக்கிறது.

ஹெச் 1 என் 1 என்ற பெயரால் மக்களுக்கு அதிகம் தெரிந்த பன்றி காய்ச்சல் நோய், சாதாரண காய்ச்சலை போலவே தும்மலினாலும், இருமலினாலும் பரவக்கூடியது. தொடுதல் மூலமாகவும் பரவியதால், மக்கள் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகினர்.

சதாரண காய்ச்சலுக்கு இருக்கும் அறிகுறியான வயிற்றுப்போக்கு, தலைவலி இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அதிக அளவிலான மக்கள் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருந்தனர்.

மேலும், 2009ம் ஆண்டு ஏற்பட்ட பன்றி காய்ச்சலின் போது 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதிப்படைந்து இறந்தனர். மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

டெங்கு:

2017ம் ஆண்டு தமிழகத்தை அச்சுறுத்திய மிகக்கொடிய நோய் டெங்கு. டெங்கு வைரசால் ஏற்படும் இந்த நோயால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகளுடன் ஏற்படும் டெங்கு காய்ச்சல், ஒரு வாரம் வரை மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், டெங்கு பாதிப்பால், தமிழகத்தில் 52 பேர்  இறந்ததாகவும் அதிகாரப்பூரவமான தகவலை தமிழக அரசு தாக்கல் செய்தது.மேலும், உலகம் முழுவதும் வருடத்திற்கு சுமார் இருபதாயிரம் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து உயிரிழக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


நிபா வைரஸ்:

இந்த ஆண்டு கேரளாவில் கோரதாண்டம் ஆடிவரும் காய்ச்சல், நிபா வைரஸ் காய்ச்சல். பழந்திண்ணி வௌவால்களால் ஏற்படக்கூடிய இந்த காய்ச்சலுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 

செவிலியர் உட்பட இதுவரை 13 பேர், கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால்,  சுகாதாரமான உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பழங்களை சாப்பிடுவதற்கு முன் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் மக்களுக்கு, சுகாதார நிலையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.