வெள்ளி, 1 ஜூன், 2018

10ஆம் வகுப்பு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி - பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்! May 31, 2018

Image

ஒரே பள்ளியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்ததால் பள்ளிக்கு பூட்டு போட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் பல்காட் மாவட்டத்தில் உள்ள தீகோட் எனும் கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 51 மாணவர்கள் தேர்வெழுதினர்.

தேர்வு முடிவுகள் வெளியானபோது அந்தப் பள்ளியில் தேர்வெழுதியவர்களில் ஒரு மாணவர் கூட வெற்றி பெறாதது பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கொதித்தெழுந்த கிராமத்தினர் அப்பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர். பள்ளியின் தலைமையாசிரியரை மாற்றம் செய்யும் வரையில் பள்ளியை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்தனர்.

இது தொடர்பாக பதிலளித்த மாவட்ட கல்வி அதிகாரி சுமன் நயின் கூறும்போது, தான் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் புதிதாக இந்த மாவட்டத்திற்கு மாற்றலாகி வந்திருப்பதால் இது குறித்து கூறுவதற்கில்லை என்றார். மேலும் தற்காலிகமாக தலைமையாசிரியரை மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மாவட்ட கல்வி அதிகாரி, தலைமையாசிரியரை பணிமாறுதல் செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக இப்பள்ளியின் ஆசிரியர்கள் சரிவர பாடம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டினை கிராமத்தினர் முன்வைத்தனர். மேலும் இதற்கு முன்னதாக கடந்த காலங்களில் பல்வேறு பரிசுகளை வென்றிருந்த இப்பள்ளி தற்போது இந்த கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹரியானா மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சிவிகிதம் 51.15% என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வால் மாவட்டத்தில் 19,491 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய நிலையில் அதில் 7,670 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். இம்மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 39.55% என்பது குறிப்பிடத்தக்கது.