திங்கள், 11 டிசம்பர், 2017

​இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த கொடூரர்கள்! December 11, 2017

Image

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை 3 பேர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சனிக்கிழமை (09-12-2017) மாலை 5 மணியளவில் தன் வீட்டிற்கு அருகில் உள்ள உணவகத்திற்கு சிறுமி ஒருவர் வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை வீட்டில் கொண்டு சென்று விடுவதாகக் கூறி இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அழைத்துள்ளனர். அந்த இளைஞர்கள் இருவரும் அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என்பதால் அந்த சிறுமியும் அவர்களை நம்பி இரு சக்கர வாகனத்தில் ஏறியுள்ளது. ஆனால் அந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் தனிமையான ஒரு இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். 

பின்னர் சுமார் ஆறு மணி நேரம் அந்த சிறுமியை தனிமையான இடத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து வெளியே தெரிவித்தால் சிறுமியை கொலை செய்துவிடுவதாகவும் அந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். மேலும் அந்த சிறுமியை அங்கேயே தனியாக விட்டுச் சென்றுள்ளனர். 

பின்னர் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் நடந்தைக் கூறி வீட்டிற்கு செல்வதற்கு அந்த சிறுமி உதவி கேட்டுள்ளார். அந்த சிறுமிக்கு உதவுவதாகக் கூறிய அந்த மர்ம நபர் சிறுமியை வேறொரு தனிமையான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் அந்த மர்ம இளைஞனும் சிறுமியை தனியாக விட்டுவிட்டு தப்பியுள்ளார். 

பின்னர் அந்த சிறுமியை தேடி அழைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமி ஊருக்கு வெளியே தனிமையாக இருப்பதைக் கண்டுபிடித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தான் மூன்று இளைஞர்களால் கூட்டுவன்புணர்வு செய்யப்பட்டது குறித்து போலீசாரிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இரு சக்கர வாகனத்தில் சிறுமியை கடத்திச் சென்ற மர்ம நபரை கைது செய்தனர். ஆனால் அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் இருந்த அந்த இரண்டு இளைஞர்களும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். 
பாதிக்கப்பட்ட அந்த சிறுமியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து அந்த சிறுமியின் தந்தை கூறும்போது, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக சிறுமி இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் அந்த சிறுமி எதைக்கேட்டாலும் அதை மறுக்காமல் செய்வதாகவும் கூறினார். மேலும் சம்பவம் நடந்த அன்று சிறுமி கடைக்கு செல்ல விரும்பியதால் அவரை அனுப்பி வைத்ததாகக் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.