திங்கள், 11 டிசம்பர், 2017

சின்னத்துறையில் இரவிலும் தொடர்ந்த பொதுமக்களின் போராட்டம்...! December 11, 2017

Image

ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. 

ஓகி புயலில் சிக்கி, நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை, உடனடியாக மீட்க கோரி, குமரி மாவட்டம் சின்னத்துறையில் 2-வது நாளாக, இரவிலும் போராட்டம் நடைபெற்றது. இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக வந்து, கலந்துகொண்டனர். மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும், என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மாயமான குமரி மாவட்ட மீனவர்களை மீட்க கோரி, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் பேரணி நடத்தினர். தங்கச்சிமடம் சவேரியார் ஆலயத்தில் தொடங்கிய பேரணி, குழந்தை இயேசு தேவாலயத்தில் முடிவடைந்தது. பேரணியில் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்ட மீனவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மாயமான குமரி மாவட்ட மீனவர்களை மீட்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவ பகுதிகளை தனி சட்டமன்ற தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.