நாகர்கோவில் அருகே வழி விடாததால் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை வாளால் தாக்கிய இளைஞர்களை, பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கட்டையன்விளையை சேர்ந்த ரத்தினம் உள்ளிட்டோர் புத்தளத்தில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். பார்வதிபுரம் அருகே சென்ற போது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், தங்களுக்கு வழி விடவில்லை எனக்கூறி காரை ஒட்டிவந்த ரெஜூவை தாக்கினர். மேலும், ஆத்திரம் தீராத அவர்கள், காரில் இருந்த அஜிதா, பத்மாவதி, ரத்தினம் ஆகியோரை வாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்தினம், பத்மாவதி, ரெஜூ ஆகியோருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற போது அவர்களை, பொதுமக்கள் சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்களை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.இதைத் தொடர்ந்து, 2 இளைஞர்களை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். துரை, ஆகாஷ் என்ற இருவரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.