திங்கள், 11 டிசம்பர், 2017

15 ஆண்டுகளாக பயனற்று துருப்பிடித்துக் கிடக்கும் மீட்புக் கப்பல்..! December 11, 2017

Image

ஆபத்து காலங்களில் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை பாதுகாக்க, தமிழக அரசால் சுமார் 15 வருடங்களுக்கு முன், மீனவளத்துறைக்கு வழங்கப்பட்ட “பவளம் கப்பல்” வெறும் காட்சிப் பொருளாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு நடுக்கடலில் எதாவது பாதிப்புகள் ஏற்பட்டால், அவர்களின் பாதுகாப்பிற்கும், படகுகள் மற்றும் அதிலிருக்கும் மீனவர்களை மீட்கவும், மீனவளத்துறையினர் படகு அல்லது சிறிய ரககப்பல்கள் மூலம் சர்வதேச கடல் எல்லை வரை ரோந்து வர வேண்டும் என்று கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இதனையடுத்து பல்வேறு ஆய்வுக்கு பின் தமிழக கடலோர பகுதிகளில், முக்கிய நகரங்களான ராமேஸ்வரம், நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மற்றும் சென்னை ஆகிய கடலோர பகுதிகளுக்கு 1996-ம் ஆண்டு, பவளம், முத்து. வலம்புரி, கயல், நீலம் என்ற பெயர்கள் கொண்ட, சுமார் 5 கோடி மதிப்பிலா 5 கப்பல்கள் மீன்வளத்துறையினருக்கு வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட கப்பல்கள் அனைத்தும் ரோந்து சென்று மீனவர்களை பாதுகாக்கும் என்று நினைத்த மீனவர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அன்றைய தினத்தில் இருந்து இன்று வரை முறையான பராமரிப்பு இல்லாததால் ராமேஸ்வரம் கடற்கரையோரத்தில் சேதமடைந்த நிலையில், வெறும் காட்சிபொருளாகவே நிற்கின்றது பவளம் என்ற இந்த மீட்பு கப்பல். 

ஒகி புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும், இன்னும் காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு மீனவர்களிடம் ஓங்கி ஒலிக்கிறது. பவளம் போன்ற கப்பல்களை முறையாக பயன்படுத்தியிருந்தால், காணாமல் போன மீனவர்களில் இன்னும் பலரை உரிய நேரத்தில் காப்பாற்றியிருக்கலாம் என ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகின்றனர். 

ஓகி புயலில் சிக்கி இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் அவர்களது குடும்பத்தினர் கண்ணீருடன் தத்தளித்து வருகின்றனர். இனியாவது மீட்பு நடவடிக்கைகளில் பவளம் போன்ற கப்பல்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே ராமேஸ்வரம் மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.