வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

அமெரிக்காவில், கமல்ஹாசன் சந்தித்த விஞ்ஞானி யார் தெரியுமா? February 9, 2018

ஒரு கருப்பு துணியால் மூடப்பட்ட ஒரு பெட்டி மேடையில் இருக்கிறது. ஒல்லியான உடல் வாகு கொண்ட ஒருவர் மேடையில் தோன்றுகிறார்.  ஏதோ ஒரு மேஜிக் ஷோவைக் காண்பதற்கு  கூட்டம் ஆயத்தமாவது போல் அனைவரும் நிமிர்ந்து அமர்கின்றனர். 

புகைப்பட கலைஞர்கள் கேமராவால் அதனைப் படமாக்க தயாராகுகிறார்கள். கருப்பு துணி போர்த்திய அந்த பெட்டியைக் காட்டி , இந்த கருப்பு துணி உள்ளிருந்து உலகம் மின்சாரத்துறையில் தன்னிறைவு அடையப் போவதாக மொழிகிறார். அரங்கில் இருப்பவர்கள் ஆச்சரியத்தில் உறைகின்றனர். கருப்பு துணியை விலக்குகிறார். 

மணல் கொட்டப்பட்ட கண்ணாடிப் பெட்டியைப் பார்த்த பார்வையாளர்களின்  முகம் இருண்டு போகிறது. மணலைக் கிண்டி அதனுள்ளிருந்து ஒரு சிறிய தகடு போன்ற ஒன்றை எடுக்கிறார் அந்த மனிதர்.  இந்த சிறிய தகடை உங்கள் தெருவில் வைத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் கிடைத்துவிடும் என்கிறார். 

சூரிய சக்தி அல்லது இயற்கை எரிவாயு மூலம் இந்த பாக்சை எளிதாக இயக்க முடியும், இதிலிருந்து, 200 கிலோ வாட் மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று அடுத்த அதிர்ச்சியை அளிக்கிறார் அந்த மனிதர். கூட்டத்தில் சலசலப்பு! அதன் பயன்பாடுகளைப் பற்றி அந்த மனிதர் விவரிக்க  கூட்டம்  கைகளைத் தட்டி கூச்சலிடுகிறது.
பார்வையாளர்களின் முகத்தில் ஆச்சரிய அலை பரவுகிறது.

 இருண்ட அவர்களின் முகத்தில்   வெளிச்சம் படர்கிறது.  உலகை ஆச்சரியத்தில் உறைய வைத்த அந்த மனிதர் கே.ஆர்.ஸ்ரீதர். தமிழகத்தில் பிறந்து உலகை வெளிச்சத்திற்கு அழைத்து செல்லும் நம்மூர் தமிழர். அவர்  அறிமுகப்படுத்திய அந்த பெட்டி ப்ளூம் பாக்ஸ். 

கே.ஆர்.ஸ்ரீதரின் அறிவின் ஆழத்தை உணர்ந்த நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள விண்வெளி தொழில்நுட்ப ஆய்வகத்தின்  இயக்குநராக அவரை நியமித்தது. 

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வில், குறிப்பாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். 

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ, திடீரென அந்த ஆய்வை நிறுத்தியது. மனம் தளராத கே.ஆர்.ஸ்ரீதர், தனது ஆய்வுகளை அப்படியே பின்னோக்கி செய்து பார்த்தார். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். 

இவ்வாய்வின் மூலம் மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கினார்.  

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் கருவியை தயார் செய்து உலகிற்கு வழங்கியுள்ளார் நம்மூர் தமிழர் கே.ஆர்.ஸ்ரீதர். இவரின் இந்த பெட்டி, உலகிற்கு நடமுறைக்கு வந்துவிட்டால், அணு உலைகளை மூடிவிட்டு, பட்டி தொட்டியெல்லால் மின்சாரம் கிடைக்கும் சூழல் ஏற்பட்டு விடும். 

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 
Image

‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் பயன்படுகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் கருவியை வாங்கி உள்ளது. இப்போது Fedex, E-bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

கே.ஆர்.ஸ்ரீதரின் இந்த பெட்டி மட்டும் இந்தியாவிற்கு வந்தால், நான்கு முதல் ஆறு வீடுகளுக்கு மின்சாரம் கிடைத்துவிடும். மின் துறையில் இந்தியா தன்னிறைவையும் அடைந்து விடும் என்கிறனர் அறிவியலாளர்கள். 

மின்சார கண்ணா என்று உலகமே வர்ணிக்கும் இந்த கே.ஆர்.ஸ்ரீதர், திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் மாணவர். இலியானா பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் இன்ஜினியரிங் முடிந்த இவர் அங்கேயே டாக்டர் பட்டத்தையும் பெற்றார். பின்னர், அரிசோனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், தொடர்ந்து, ஸ்பேஸ் எனர்ஜி லேபாரட்டரியில் இயக்குநராக பணிபுரிந்தார். இருண்ட உலகை வெளிச்சத்திற்கு கொண்டு வர பின்னர் அவர் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
 
அதன் பயன் தான் இவர் கண்டுபிடித்த ப்ளூம் பாக்ஸ். மின்சார கண்ணனாக  உலகம் முழுவதும் பேசப்படும் கே.ஆர்.ஸ்ரீதரின் கண்டுபிடிப்பு இந்திய மண்ணிற்கு வரும் போது இந்தியா புதிய வெளிச்சத்தில் பயனிக்கும் என்று நம்பலாம்.