
இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 42 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதில் அதிக அளவிலான வழக்குகள் நிலுவையில் உள்ள உயர்நீதிமன்றங்களில் சென்னை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
தேசிய நீதித்துறைக்கான ஆவண தகவலின் படி 2018ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் சுமார் 42 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரியவந்துள்ளது.
இதில் 49 விழுக்காடு வழக்குகள் 5 வருடத்திற்கும் அதிகமாக நிலுவையில் இருக்கின்றன. அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நீதிமன்றங்கள் வரிசையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் முதல் இடத்திலும், சென்னை உயர் நீதிமன்றம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
52 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் தேங்கும் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்குறை 37 சதவீதமாக உள்ளதாகவும் தேசிய நீதித்துறைக்கான ஆவணக் காப்பகம் தகவல் அளித்துள்ளது.