கவுட்டா: ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால், அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக தகவல் தெரியவந்துள்ளது. உணவு மற்றும் மீட்பு உதவிகளை பெறவேண்டும் என்றால், தங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்குமாறு அவற்றை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆண்கள் கூறுவதாக மீட்புதவிப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்கியே உதவிப் பொருட்களைப் பெற்று வந்ததாக பிறர் கருதுவார்கள் என்பதால் பல பெண்கள் உதவி மையங்களுக்கு செல்வதையே தவிர்க்கின்றனர் என்று மீட்புதவிப் பணியாளர்கள் கூறியுள்ளனர். சிரிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் பலவற்றிலும் மனிதாபிமான உதவிகளுக்காக பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவதாக ஐ.நாவின் மக்கள் தொகை நிதியகம் (United Nations Population Fund) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவு மற்றும் தங்குமிடம் தேவைப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் தேவைகளுக்காக குறுகிய காலம் திருமணம் செய்துகொள்வது, உதவிப் பொருட்களை பெற வரும் பெண்களின் தொலைபேசி எண்களைப் பெறுவது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண் துணை இல்லாத பெண்கள், கணவரை இழந்த பெண்கள், விவாகரத்து செய்துகொண்டவர்கள், உள்நாட்டுப் போரால் வேறு இடங்களுக்கு சென்று வசிப்பவர்கள் ஆகியோரே எளிதில் பாதிப்புக்கு உள்ளாவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=380090