தூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர்கள் முடங்கியதால், பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.
ஆன்லைன் மூலம் பத்திரங்களை பதிவு செய்யும், ஸ்டார் 2.0 திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில், சர்வர்கள் முடங்கியதால், பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.
தூத்துக்குடி பதிவுத்துறை அலுவலகத்தில், ஒரு பத்திரத்தை கூட பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. திருமணப்பதிவு, சொத்துப்பதிவு போன்ற பணிகள் நடைபெறாததால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சர்வர்கள் முடங்கியதால், தூத்துக்குடி பதிவுத்துறை அலுவலகம் வெறிச்சோடியது.
சென்னை அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பத்திரங்களை பதிவு செய்ய வந்தவர்கள், நீண்ட நேரம் பதிவுத்துறை அலுவலகத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் பதிவாளர் அலுவலகத்தில், ஆன்லைன் பத்திரப்பதிவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கடந்த 2 நாட்களாக மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம், பத்திரப்பதிவு அலுவலகத்தில், காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது. எனவே, தொழில்நுட்ப கோளாறை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.