பெண்கள் நலனில் மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லையா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி, கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
நிபுன் சக்சேனா என்பவர் தொடர்ந்த வழக்கில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு மத்திய அரசின் நிர்பயா திட்டம் மூலம் மாநில அரசுக்கு கிடைத்த தொகை எவ்வளவு, எத்தனை பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிக்கிம் மாநிலம் தவிர வேறு எந்த மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்யாததை கண்ட நீதிபதிகள், பெண்கள் நலனின் அக்கறை இல்லையா என மாநில அரசுகளுக்கு காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பதிலளிக்காமல் இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தயாராக இல்லாததை காட்டுவதாக உள்ளது என அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து மேலும் 4 வாரங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அடுத்த முறை தவறாமல் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.