வியாழன், 8 பிப்ரவரி, 2018

உயிரிழந்த குட்டி யானையின் உடலை மீட்கச் சென்றவர்களை விரட்டியடித்த தாய் யானை! February 7, 2018

உதகை அருகே குட்டி யானை இறந்தது தெரியாமலேயே அதன் உடலை மீட்கச் சென்ற வனத்துறையினரை நெருங்க விடாமல் விரட்டிய தாய் யானை காவலாக நிற்பது காண்போரை நெகிழ வைப்பதாக இருக்கிறது. 

இன்று காலை கோவை மாவட்டம் சிங்காரம் வனப்பகுதி அருகே உள்ள பொக்காபுரம் வனப்பகுதியில் இறந்து கிடக்கும் குட்டி யானைக்கு அருகே தாய் யானை உட்பட இரண்டு யானைகள் நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

உடனே நிகழ்விடத்திற்கு விரைந்த சிங்காரம் வனப்பகுதியினர் இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு குட்டி யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்க முனைந்தனர். 

ஆனால் குட்டி யானையின் உடல் அருகே நின்ற இரண்டு யானைகளும் வனத்துறையினரை நெருங்க விடாமல் விரட்டின. வனத்துறையினரின்  வாகனத்தையும் யானைகள் தாக்கின. 

வனத்துறையினர் மனந்தளராமல் 6 மணி நேரமாகத் தொடர்ந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர். குட்டி யானை இறந்தது தெரியாமலேயே தாய் யானை பாதுகாப்பிற்கு நிற்பது பார்ப்பவர்கள் நெகிழும் வகையில் இருக்கிறது.