அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கார் பரிசாக அறிவிக்கப்பட்ட காளைக்கு அரசியல் காரணங்களுக்காக பரிசு மறுக்கப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை பிடாரம்பட்டியைச் சேர்ந்த மலையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அலங்காநல்லூரில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்ற தனது காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் கடைசி நிமிடத்தில் தான் சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் ஆதரவாளர் என்பதால், தனக்கு கார் பரிசளிக்காமல், ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரின் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
எனவே தனக்கு கார் பரிசளிக்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் அவர் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.