சனி, 17 மார்ச், 2018

சிரியா உள்நாட்டுப் போர் : தொடர் தாக்குதல்களால் கடந்த 24 மணிநேரத்தில் 50,000 பேர் வெளியேற்றம்


டமாஸ்கஸ்: சிரியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஒரே நாளில் 50,000 பேர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நீடிப்பதற்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் தான் காரணம் என்பது அனைத்து தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. இவ்விரு வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தில் நடைபெறும் உள்நாட்டு சண்டையில் இதுவரை 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து அங்கிருந்து நேற்று ஒரே நாளில் சுமார் 30,000 பேர் வெளியேறினர். கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய அரசு படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20,000 பேர் வெளியேறி உள்ளனர். இதனால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 50,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

70% பகுதிகளை கைப்பற்றியதாக சிரிய ராணுவம் அறிவிப்பு

சிரியாவின் கிழக்கு கூட்டா நகரில் 70 சதவீத பகுதிகளை போராளிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக அரசுப் படைகள் தெரிவித்துள்ளன. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உள்பட 1,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சிரிய ராணுவமும் தற்போது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனிடையே கூட்டா நகரில் 70 சதவீத பகுதிகளை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றி விட்டதாக சிரிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.