சனி, 17 மார்ச், 2018

உலகின் மிகச் சிக்கலான வரிமுறையில் இந்தியாவின் ஜி.எஸ்.டி. : உலக வங்கி அதிர்ச்சி தகவல்!


டெல்லி: உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவின் ஜி.எஸ்.டி. வரி உலகிலேயே மிகச் சிக்கலான வரிமுறை என்றும் உலகிலேயே இரண்டாவது மிக உயர்ந்த வரி விகிதம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி 0%, 5%, 12%, 18%, 28% என்ற வகைகளில் விதிக்கப்பட்டுள்ளன. இந்த முறையால் சில பொருட்களுக்கான வரி ஏற்கனவே இருந்ததை விட அதிகரித்தது. இதனால் அந்த பொருட்களின் விலை உயர்ந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மக்கள் மத்தியிலும் விலை உயர்வு எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த விரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வர பல்வேறு பிரிவினரும் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜி.எஸ்.டி வரி அதிகம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில், 115 நாடுகள் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன. இதில் 49 நாடுகள் ஒற்றை வரிவிதிப்பு முறையை கையாண்டு வருகின்றன.

28 நாடுகள் இரட்டை வரி கட்டமைப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன. ஆனால், இந்தியாவின் ஜி.எஸ்.டி. கூடுதல் வரிவிகிதத்துடனும், அதிக அடுக்குகளுடனும் இருப்பதால் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதேசமயம், மிகச் சிக்கலான இந்த வரிமுறையை 0% வரிவிகிதம் ஓரளவுக்கு எளிமையாக்குவதாகவும், 28% என்பது உலகளவில் இரண்டாவது அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரம்பு என்றும் உலக வங்கி கூறியுள்ளது.