ஞாயிறு, 11 மார்ச், 2018

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ: ஒருவர் பலி.... விமானப்படை மூலம் மீட்புப்பணி தீவிரம்


போடி: போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். கொழுக்குமலை என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 40க்கும் மேற்பட்ட மாணவிகள் சிக்கியுள்ளனர். மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட போது கல்லூரி மாணவிகள் காட்டுத்தீயில் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயில் சிக்கித் தவிக்கும் மாணவிகளை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து தேனி மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள்  சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவிகள் கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்கப்படுவர் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணி:
காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவிகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவின் பேரில் மாணவிகளை மீட்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. தமிழக முதல்வரின் வேண்டுகோளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தேனி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு விமானப்படை மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Posts: