வியாழன், 8 மார்ச், 2018

சாதி உணர்வு அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர இதை வேறு எப்படி புரிந்து கொள்ள முடியும் ?

பாண்டேவின் லீலைகள்.
காஞ்சிபுரத்தில் 2011ம் ஆண்டு, செங்கொடி என்பவர், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யவில்லை என்பதற்காக தீக்குளித்து இறந்தார். அந்த தீக்குளிப்பை யாரும் நியாயப்படுத்தவோ ஆதரிக்கவோ போவதில்லை. ஆனால், செங்கொடி காதல் தோல்வியால் இறந்தார் என்று தினமலரில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டவர்தான் அப்போது தினமலரில் பணியாற்றிய பாண்டே.
சமீபத்தில் நடந்த விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகையில், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், எழுந்து நிற்காமல் இறுமாப்பாக அமர்ந்து கொண்டு, பின்னர் அது சர்ச்சையானதும், தியானம் செய்தேன் என்று கூசாமல் புளுகினார்.
அந்த நிகழ்ச்சி நடந்தபோது, விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த ஒளிப்பதிவு எந்த சேனலிடமும் இல்லை. தந்தி டிவியிடம் மட்டுமே இருந்தது. அந்த ஒளிப்பதிவை பாண்டேவிடம் கொடுத்தபோது, இதெல்லாம் ஒரு செய்தியா என்று உதாசீனப்படுத்தினார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியை கவர் செய்த செய்தியாளர் எழில் ஒரு தமிழ் உணர்வாளர். அவருக்கு மனது கேட்கவில்லை. சக செய்தியாளரோடு அந்த ஒளிப்பதிவை பகிர்ந்தார். பின்னர், நியூஸ் 7, புதிய தலைமுறை, மற்றும் நியூஸ் 18 ஆகிய சேனல்களில் இது ஒளிபரப்பாகி, தமிழகமே கொந்தளித்தது.
ஒவ்வொரு பத்திரிக்கையாளருக்கும், தான் வெளியிடும் செய்தி, சர்ச்சையாகி, அரசியல் தலைவர்கள் விவாதித்து, அறிக்கை வெளியிடும் நிலைக்கு செல்வது என்பது ஒரு பெருமை. ஒரு வகையில் போதை என்று கூட சொல்லலாம். ஆனால் பாண்டேவுக்கு அதை விட, விஜயேந்திரரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது.
அது மட்டுமல்ல. செய்தியாளர் எழில்தான் விஜயேந்திரரின் ஒளிப்பதிவு வெளியே செல்ல காரணமாக இருந்தது என்பதை உணர்ந்து எழிலுக்கு மறு நாள் எந்த வேலையும் கொடுக்காமல், உள்ளே நுழைய விடாமல் அவமானப்படுத்தினார். பின்னர் நேரடியாகவே அழைத்து அவரை வேலையை விட்டு அனுப்பினார். அந்த எழில் தற்போது வேறு சேனலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
மொழி உணர்வை விட, பாண்டேவுக்கு சாதி உணர்வு அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர இதை வேறு எப்படி புரிந்து கொள்ள முடியும் ?
பத்திரிக்கையாளர் என்பதற்கு முன் ஒவ்வொருவரும் மனிதர்தான். அவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். ஆனால், தனது விருப்பு வெறுப்பு செய்தியில் பிரதிபலிப்பதை அனுமதிப்பவன், நல்ல பத்திரிக்கையாளனாக இருக்க முடியாது.
பாண்டே பத்திரிக்கையாளரா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும்.
Shankar A

Related Posts: