ஞாயிறு, 4 மார்ச், 2018

சிரியாவில் போர் நிறுத்தம் வேண்டி கவிதை வீடியோ வெளியிட்ட கவிஞர் வைரமுத்து! March 3, 2018

சிரியாவில் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி கவிஞர் வைரமுத்து, சிரியா மண்ணே சிரி என்ற தலைப்பில் கவிதை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கருக்குழியில் வளர்த்த சிசுக்களை பதுங்கு குழியில், தங்கள் கற்பைப் போல தாய்மார்கள் பாதுகாப்பதாக கூறும் வைரமுத்து, போரும், மரணமும் எந்த வடிவிலும் அழகில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

வைரமுத்துவின் கவிதை இதோ :

“சிரியா மண்ணே சிரி” 

“குருதித் துளி சொட்டுகிறது-
மழையறியா சிரியா வானம்!

இப்போது இது என்தேசம் என்கிறது,
மேகங்களை நாடுகடத்தி, 
ஆகாயம் கைப்பற்றிய கரும்புகை!

கருக்குழியில் வளர்த்த சிசுக்களை
பதுங்கு குழியில் பாதுகாக்கிறார்கள்
தங்கள் கற்பைப் போல - தாய்மார்கள்!

சாந்தியும், சமாதானமும் நிலவக் கருதும்
பிரார்த்தனைக் குரல் நசுங்கிப் போகிறது-
குழந்தைகள் கதரும் கூட்டோசையில்!

மீட்டெடுத்த சிறார் உடம்பில் 
பாதி மாமிசம்;
பதுங்குக்குழியில் 
மீதி மாமிசம்!

ரசாயன இறைச்சி உண்டதில்
இறந்துக் கிடந்தன - பறந்த கழுகுகள்!

வீடுகள் கான்கிரீட் கல்லறைகளாவதும்,
வீதிகள் உடல்களின் -
குப்பைத் தொட்டிகளாவதும்; 
சாப்பாட்டு மேஜைகளில்-
பிணங்கள் பரிமாறப்படுவதும்;
அதிராத குரல்களில் உரையாடப்படுகின்றன-
ஐநாவின் தேநீர் இடைவேளைகளில்...

எலும்புக் கூடுகளில் 
எது சன்னி? எது ஷியா?
தோண்டிய தோட்டாக்களில்
எது அமெரிக்கா? எது ரஷ்யா?
எரியும் நெருப்பில்
எது சவுதி? எது கொரியா?

ஆயுதச் சூதாடிகளின் 
வங்கிக் கணக்குகள் நிறைவது,
பணத்தினால் அன்று - பிணத்தினால்!

கபாலக் கோப்பைகளில் 
ஒயின் பருக முடியாது!
போரும் மரணமும் 
எவ்வடிவிலும் அழகில்லை!
வலியும் குருதியும் 
எவ்வுடலிலும் சுகமில்லை!

அழுதக் குழந்தையே பால் குடிக்கும் எனில்,
அமைதிப் பால் எங்கே?
எல்லா நாடுகளின் மார்பிலும்
சமாதான முலை முளைக்கட்டும்!
சிரியா மண்ணே சிரி!
வழியும் குருதியே வழி
ஒழியாப் போரே ஒழி
ரோஜாக்களில் ரத்தம் வருவது
வட்ட உருண்டைக்கு - கெட்ட சகுனம்!”

- வைரமுத்து

Image