ஞாயிறு, 4 மார்ச், 2018

நேரடி பத்திரப் பதிவுக்கு உத்தரவிடக் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! March 4, 2018

Image

ஆன்லைன் முறை முழுமையாக அமல்படுத்தும் வரை, நேரடியாக பத்திரப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, பதிவுத்துறை ஐ.ஜி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் முறையில் பத்திரப் பதிவு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த பூபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம நத்தம் நிலங்களையும், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத நிலங்களையும் பத்திரப் பதிவு செய்ய முடியவில்லை என்றும், இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை, நேரடியாக பத்திரப் பதிவு செய்யும் நடைமுறையை பின்பற்றும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஊழலைக் குறைப்பதற்கு பதில், ஆன்லைன் பத்திரப் பதிவு முறை, இடைத்தரகர்கள் அதிகரிக்க வழி செய்துள்ளது என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனு மீது வரும் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக பதிவுத்துறை ஐ.ஜி.க்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.