
ஏர்செல் சேவையை நீட்டிக்க கோரி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் ஏர்செல் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ஏர்செல் சேவை நிறுத்தப்படும் என்பதால் அனைத்து வாடிக்கையாளர்களும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையை பெறும் வரை சேவையை நீட்டிக்க டிராய்க்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவில், 90% வாடிக்கையாளர்களால் ஏர்செல் சேவை இணைப்பை பயன்படுத்த முடியவில்லை எனவும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏர்செல் வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் எண், சமையல் எரிவாயு, வங்கி பரிவர்த்தனை போன்ற அடிப்படை பயன்பாடு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதால், மாற்று நெட்வொர்க் சேவையை பெறும் வரை ஏர்செல் சேவையை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானார்ஜி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது வரும் வெள்ளிக்கிழமைக்குள் மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் ஏர்செல் நிறுவனம் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.