காமன்வெல்த் போட்டியில் 15 வயதே ஆன இந்திய இளம் வீரர் அனிஷ் பன்வாலா துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளார்.
21வது காமன்வெல்த் போட்டிகள் இம்மாதம் 4ம் தேதி கோலாகாலமாக தொடங்கி கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவிலிருந்து 220 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு பங்கு பெற்றுள்ளது. இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் பலரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதுவரை 17 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதில் ஆடவர் 25மீ ரேபிட் பயர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 15வயதே ஆன இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அனிஷ் பன்வாலா பெற்றுள்ளார். அனிஷ் பன்வாலா இதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதாவது, சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற 2018 ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றுள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் அனிஷ் பன்வாலா கலந்து கொண்டு இரண்டு தங்கங்களை வென்று அதிக புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு செக் குடியரசிலுள்ள பில்ஜெனில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் கலந்து கொண்டு அனிஷ் பன்வாலா தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.