வியாழன், 12 ஏப்ரல், 2018

​திருச்சியில் காவிரிக்காக போராடிய 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது! April 12, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, திருச்சியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது, பேருந்தின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திருச்சி நீதிமன்றம் அருகே, அண்ணாநகர் சாலையில் திரண்ட 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

தகவலறிந்த வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். எனினும், இளைஞர்கள் அங்கிருந்து கலைய மறுத்தால், அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். மேலும், இளைஞர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றினர். அப்போது, பேருந்து கண்ணாடியை சிலர் உடைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

மற்றொரு தரப்பினர், அரசு தலைமை மருத்துவமனை வழியாக சென்ற  கர்நாடக அரசு பேருந்து வழிமறித்து கல்வீச்சில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல்துறை ஆணையர் அமல்ராஜ், போராட்டங்களில் ஈடுபட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.