ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலத்த பாதுகாப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அரசியல் கட்சிகள், தமிழக அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. இந்நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே ஒன்று கூடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் MA சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவாயிலுக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.
பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என, பல்வேறு தரப்பினரும், போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனையடுத்து, சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி, சுமார் 4 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உளவு போலீசார், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, கிரிக்கெட் வீரர்களுக்கும், சேப்பாக்கம் மைதானத்திற்கும், கூடுதல் ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.