வியாழன், 12 ஏப்ரல், 2018

தமிழகமே கருப்பாக மாற வேண்டும் - ஸ்டாலின் April 12, 2018

Image

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு உடை அணிவதுடன், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே  கீழையூரில் விவசாயிகள் மத்தியில் உரையாடினார். அப்போது பேசிய ஸ்டாலின், காவிரிக்காக அனைத்து விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு அதற்காக ஆயுள் முழுக்க சிறையில் செல்லவும் தயாராக இருப்பதாக கூறினார்.  

இன்று சென்னை வரவுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என கூறிய ஸ்டாலின், பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆண்களும், பெண்களும் கருப்பு உடை அணிவதுடன், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட வேண்டும் என வலியுறுத்தினார். 

கருப்பு பட்டையாவது உடையில் அணிந்து கொள்ளுங்கள் என வேண்டுகொள் விடுத்துள்ளார். தமிழகமே கருப்பாக மாற வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து, திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருக்கிறது.