சிறுமி ஆஷிபாவின் கொலை சம்பவம் பற்றி நாடே கொந்தளித்துவரும் நிலையில், ஆஷிபாவின் கொலை சரியான ஒன்று என்று கோடக் மஹிந்திரா வங்கியின் துணை மேலாளரின் ட்விட்டர் பதிவு, சமூகவலைதளங்களில் பெரும் எதிர்ப்பை பெற்று வருகிறது.
கேரளாவை சேர்ந்த விஷ்ணு நந்தகுமார், கேரளாவில் உள்ள கோடக் மஹிந்திரா வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஆஷிபாவின் கொலை சம்பவம் குறித்து அறிந்த அவர், சிறுமி ஆஷிபா இந்த வயதிலேயே கொல்லப்பட்டது சரி என்றும், அவ்வாறு கொல்லப்படவில்லை என்றால் வளர்ந்தபின் தற்கொலை செய்துகொண்டு, இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவாள் என்றும் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை பார்த்த பலர், அவருடைய பதிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கோடக் மஹிந்திரா வங்கியின் முகநூல் பக்கத்தில் போடப்பட்டிருந்த கடைசி பதிவில், அந்த துணை மேலாளரை பணி நீக்கம் செய்யுமாறு 34 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் சீறுடை அணிந்தவாறு இருக்கும் அவரது புகைப்படங்களையும் பரப்பி வருகின்றனர்.
துணை மேலாளரின் இச்செயலை கண்டித்து, கோடக் மஹிந்திரா வங்கிக்கு 1 ஸ்டார் மதிப்பீடு கொடுத்தது மட்டுமல்லாமல், வங்கிக்கணக்கை மூடப்போவதாகவும், கேரளா மக்கள் தெரிவித்துவருகின்றனர்.
வங்கியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும்வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்ட துணை மேலாளரை, வங்கி நிறுவனம் பணி நீக்கம் செய்தது. மேலும், விஷ்ணு அவ்வாறு பதிவிடுவதற்கு முன்பாகவே நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக, வங்கி நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.
இதனைத்தொடர்ந்து, வங்கியின் செயலை பாரட்டிய பலர், சமூகவலைதளங்களில் தவறான கருத்தை பதிவிடுபவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.