காவிரி பிரச்சனைக்காக தமிழகம் கொந்தளிக்கும் சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், வெற்றிமாறன், நடிகர் சத்யராஜ் உளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா, தமிழகத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது என்றும், தார்மீக ரீதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். அதற்காகவே பேரவை தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய பாரதிராஜா, தமிழகத்தின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சத்யராஜ், தமிழகத்தில் நல்ல தலைவர்கள் பலர் உள்ளதாகவும், அரசியல் தலைவர்கள் அளவுக்கு நடிகர்களால் தமிழர் பிரச்னையில் தீர்வு காண முடியாது என்றும் கூறினார். தமக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று கூறிய சத்யராஜ், தங்கள் வீடுகளில் ஐடி ரெய்டு வந்தால் ஒன்றும் தேறாது என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐபில் போட்டியின் போது, சேப்பாக்கம் மைதானத்தை காலியாக இருக்க செய்வோம் என்று கூறினார்.
தமிழகத்தை, தொடர்ந்து மத்திய அரசு வஞ்சிப்பதாகவும், இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று இயக்குநர் அமீர் கூறினார். காவிரி வழக்கு முடிவுக்கு வந்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது தேசிய கட்சிகளின் மெத்தனத்தை காட்டுவதாகவும், வெற்றியோ தோல்வியோ இனி தங்கள் பிரச்னைக்காக தாங்களே போராடவுள்ளதாக தெரிவித்தார்.