கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர்.
பெரும்பான்மை இடங்களை வைத்திருக்கும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை அழைக்காமல் பாஜகவை அழைத்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த இடத்தில் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து அறிந்து கொள்வது முக்கியமாகிறது.
மாநில நிர்வாகத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். அரசியலமைப்பு சட்டப்படி ஒரு ஆட்சி மாநிலத்தில் நடப்பதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும். அதற்காக ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆளுநரின் அதிகாரங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
நிர்வாக ரீதியிலான அதிகாரங்களைப் பொறுத்த வரைக்கும், பதவிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதும், நீக்குவதும் ஆளுநரின் அதிகார வரம்புக்குள் வரும்.
சட்ட ரீதியிலான அதிகாரங்களில் மாநிலத்தில் ஒரு அரசு அமைவதை உறுதிப்படுத்தும் பணிகள் ஆளுநருடையது. மேலும் மாநிலத்தில் அமைந்திருக்கும் அரசு பெரும்பான்மை பலமுள்ளதாக இருப்பதையும் ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும். இந்த இடத்தில் தான் ஆங்கிலத்தில் Discretionary powers என்று அழைக்கப்படும் ஆளுநரின் விருப்ப அதிகாரங்கள் வரும்.
ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதாக ஆளுநர் நினைத்தால் அந்தக் கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம். ஆனால் குறிப்பிட்ட இடைவெளிக்குள் அந்தக் கட்சி தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும். ஆட்சியிலிருக்கும் கட்சியின் பெரும்பான்மை குறைந்ததாக ஆளுநர் உணர்ந்தால் அந்தக் கட்சியின் பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.
ஆனால் ஆளுநர் இதனைச் செய்ய வேண்டும் என யாரும் அவரை நிர்பந்திக்க முடியாது. அது ஆளுநரின் விருப்பத்துக்குட்பட்டது. ஒரு மாநிலத்தில் அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் ஆளுநர் நேரடியாக ஆட்சி செய்வார்.
ஆளுநர்களின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு எதிராக இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும். அதே போல் ஆளுநர் பதவியே தேவையற்றது என்ற குரலும் உண்டு. ஆனால் ஆளுநரின் செயல்பாடுகள் மக்களாட்சியின் மாண்பைக் கெடுத்து விடக் கூடாது என்பதே பெரும்பான்மையானவர்களின் கருத்தாக உள்ளது.