தூத்துக்குடியில் 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நேற்று முன் தினம் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், நேற்று அண்ணா நகர் என்ற பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்ற இளைஞரும் உயிரிழந்தார்.
சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், தூத்துக்குடியில் காமாண்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், கடந்த 3 தினங்களாக அவதியடைந்து வருவதாக தூத்துக்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.