உலகின் உயரமான மலை சைக்கிள் பந்தயம் சிக்கிம் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இயற்கை எழில்கொஞ்சும் சிக்கிம் மாநிலம், கண்கவர் நிலப்பரப்பு, செங்குத்தான மலைமுகடுகள், பாறை சரிவுகள் என மலை சைக்கிள் சாகச விளையாட்டின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.
இங்கு உலகின் மிக உயரமான மலை சைக்கிள் பந்தயம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது, இதனை Mountain Goats என்ற தனியார் அமைப்புடன் இணைந்து சிக்கிம் வடக்கு மாவட்ட நிர்வாகம் நடத்த உள்ளது.
‘Beti Bachao Beti Padhao’ மற்றும் இமயமலையை பாதுகாப்போம் என்ற தாரக மந்திரங்களை முன்னிறுத்தி இந்தப் பந்தயம் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டியில் இந்தியா முழுதும் இருந்து வந்த வீரர்கள் பங்கேற்றனர், ஆனால் தற்போது நடைபெற இருக்கும் பந்தயத்தில் இந்தியா மட்டுமல்லாது நேபாளம் மற்றும் பூடான் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
சிக்கிம் மாநில சுற்றுலா மற்றும் இளையோர் தொழில் முனைவோர் வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த பந்தயத்தை அம்மாநில அரசு நடத்த உள்ளது.
330 கிமீ தூரம் கொண்ட இப்பந்தயம் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல் நாள், Mangan பகுதியில் தொடங்கி Lachung நகர் வரைக்கும், இரண்டாம் நாளில் Lachung நகரின் தொடங்கி Yumesamdong வரை சென்று பின்னர் மீண்டும் Lachung நகரை வந்தைடைய வேண்டும்.
பின்னர் 3ஆம் நாளில், Lachung நகரில் தொடங்கி Thangu மற்றும் Lachen axis வரைக்கும் சென்று Thangu பகுதிக்கு திரும்ப வேண்டும். போட்டியின் இறுதி நாளில் Thanguவில் தொடங்கி Gurudongmar ஏரியை வந்தடைய வேண்டும். ஆனால் இந்த பந்தயம் நடைபெற இருக்கும் பாதை மிகவும் கரடு முரடாக இருப்பதோடு, வீரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்தயத்திற்கு பாதுகாப்பு அளிக்க இந்திய ராணுவம் முன்வந்துள்ளது, ராணுவ வீரர்கள் மருத்துவ மற்றும் வீரர்களுக்கு தேவையான உணவு, உபகரணங்களை வழங்க உள்ளனர். போட்டியில் வெல்பவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகையை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநிலங்களவை எம்.பி ஹிஸ்ஸே லசுங்கப்பா வழங்க உள்ளனர்.