அறிவியல் ஆராய்ச்சியின் பெயரால் 120க்கும் மேற்பட்ட கர்ப்பிணி திமிங்கலங்கள் கொல்லப்பட்டிருப்பது குறித்து வெளியான புள்ளிவிவரத்தால் கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கும் திமிங்கலங்கள் குறித்து வெளியான புள்ளிவிபரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டார்டிக் கடல் சுற்றுச்சூழலின் இயக்கவியல் குறித்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக திமிங்கலங்களை வேட்டையாடி ‘உயிரியல் மாதிரி’ என்று அவர்கள் வகைப்படுத்தி இந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக கடந்த கோடை காலத்தில் மட்டும் 333 'Minke' வகை அண்டார்டிகா திமிங்கலங்கள் கொல்லப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையில் 120க்கும் மேற்பட்ட கர்ப்பிணி திமிங்கலங்களும் அடங்கும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
வெடி மருந்துகளை திமிங்கலங்களின் உடலில் செலுத்தி வெடிக்கச் செய்து மிகவும் மோசமான வகையில் இவைகள் கொல்லப்பட்டு வருவதாகவும், இந்த முறையில் கொல்லப்படுவது சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தும் ஜப்பான் இந்த முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்று கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
புள்ளிவிபர கணக்கின்படி கொல்லப்பட்ட திமிங்கலங்களில் 67% பெண் திமிங்கலங்கள் என்றும், 114 திமிங்கலக் குட்டிகள் என்றும் தெரியவந்துள்ளது.
ஒருபுறம் அறிவியல் ஆராய்ச்சிக்காக இவை கொல்லப்படுவதாக கூறப்பட்டாலும் ஜப்பானின் மீன் சந்தைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் திமிங்கலங்களில் கறி விற்பனைக்கு கிடைப்பதாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள், குரல் கொடுத்து வருகின்றனர்.