வெள்ளி, 25 மே, 2018

குமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்கப்படவில்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா May 25, 2018

Image

கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிப்பது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத் தேர்தலில் 68 சீட்கள் பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 சீட்கள் பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த பரமேஸ்வராவிடம், குமாரசாமி முதல்வராக 5 ஆண்டுகள் முழுமையாக நீடிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று கேட்ட போது அது குறித்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

மேலும், மந்திரிசபையில் எந்த கட்சிக்கு எந்த துறைகளை பகிர்ந்தளிப்பது என்பது குறித்தும், முதல்வராக குமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு அளிப்பதா அல்லது காங்கிரஸ் கட்சியும் அப்பதவியை பகிர்வதா என்பது குறித்த பேச்சுவார்த்தை இன்னமும் நடைபெறவில்லை என்றும் பரமேஸ்வரா கூறினார்.

துணை முதல்வர் பதவி குறித்த தேர்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில மூத்த தலைவர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படி எதுவும் தனக்கு தகவல் இல்லை என்றும் கட்சியின் தலைமையே இது குறித்த முடிவுகளை எடுக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

பின்னர், மற்றொரு முக்கியத் தலைவரான டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாகவும், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ரகசிய கூட்டம் நடத்தியிருப்பதாகவும் வெளியான தகவல் குறித்த கேள்விக்கு அப்படி ஒரு கூட்டம் நடந்திருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் ஆனால் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பது மட்டும் உறுதி என்றார்.

மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சிவக்குமார் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுவது குறித்த கேள்விக்கு, அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அனுபவம் வாய்ந்த அவர் கட்சியை திறமையுடன் வழிநடத்த தகுதியானவர் என்று கூறினார்.