திருப்பூரில் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் ஸ்கூட்டருக்கு பதிவு எண் வழங்காமல் இழுத்தடிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை ஒப்படைத்த இளைஞர்!
திருப்பூரில், லஞ்சம் கொடுக்க மறுத்ததால் ஸ்கூட்டருக்கு பதிவு எண் வழங்காமல் தனியார் நிறுவனம் இழுத்தடித்தது. இதனால் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஸ்கூட்டரை ஒப்படைக்க வந்தவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் அங்கேரிபாளையம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 42). இவர் அந்த பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 30-ந்தேதி திருப்பூர் பெரியார்காலனியில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த பல்வேறு இருசக்கர வாகனங்களை பார்வையிட்டு அவற்றின் விலையை பற்றி அவர் கேட்டறிந்தார். பின்னர் ஒரு ஸ்கூட்டரை வாங்க தேர்வு செய்தார். அந்த ஸ்கூட்டரின் விலையான ரூ.53 ஆயிரத்து 942-க்கு ரூ.21 ஆயிரத்து 549-ஐ செலுத்தி விட்டு மீதி தொகையை தனியார் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் செலுத்தும் வகையில் ஸ்கூட்டரை வாங்கி னார். இதையடுத்து நாகராஜன் வாங்கிய ஸ்கூட்டருக்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய வகையில் ஜாமீன்தாரராக கையெழுத்து போட அவரது நண்பரான 15 வேலம்பாளையத்தை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன் என்பவர் கடந்த 3-ந்தேதி பெரியார் காலனியில் உள்ள சம்பந்தப்பட்ட இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்திற்கு சென்றார்.
அப்போது அந்த ஸ்கூட்டருக்கு முழு இன்சூரன்சு, சாலைவரி, பதிவு கட்டணம் ஆகியவற்றிற்கு ரூ.6 ஆயிரத்து 740 வாங்குவதற்கு பதிலாக ரூ.1,791 கூடுதலாக சேர்த்து ரூ.8 ஆயிரத்து 531 வாங்கியது தெரியவந்தது. இது குறித்து நாஞ்சில்கிருஷ்ணன் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார்.
அப்போது அவர்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இருசக்கர வாகன நிறுவனத்தினர் நாகராஜன் வாங்கிய ஸ்கூட்டருக்கு முறையான ரசீதை வழங்க மறுத்ததுடன், அந்த ஸ்கூட்டருக்கு பதிவு எண் வாங்கி கொடுக்கவும் மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்கூட்டர் வாங்கி 26 நாட்கள் ஆகியும் அதற்கு பதிவு எண் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜன், நாஞ்சில் கிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை அந்த ஸ்கூட்டருடன் குமார்நகரில் உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தனர். அத்துடன் ஆர்.டி.ஓ.விற்கு லஞ்சம் கொடுக்க மறுத்ததால் வாகனத்திற்கு பதிவு செய்யவில்லை. எனவே வாகனம் ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைப்பு என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஸ்கூட்டரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கமும் தொங்கவிட்டபடி ஆர்.டி.ஓ. அறை முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி வைத்தனர். இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த பிரச்சினை தொடர்பாக நாகராஜன் வட்டார போக்குவரத்து அதிகாரி சிவகுருநாதனை சந்தித்து புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. இந்த விவகாரம் தொடர்பாக நாகராஜன் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இரு தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பதிவு செய்யப்படாத அந்த ஸ்கூட்டரை நாகராஜன் அங்கிருந்து எடுத்துச்சென்றார்.