21ம் நூற்றாண்டின் அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் இந்த ஆண்டில் நிகழ இருக்கிறது.
2000 ஆண்டு முதல் 2100ஆம் ஆண்டு வரையிலான 21ம் நூற்றாண்டிலே அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் (Lunar Eclipse) வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி வர இருக்கும் பெளர்ணமி நாளில் நிகழ இருப்பதாக வானியளாலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதியன்று நிகழ்ந்த சந்திர கிரகணமானது ஒரு மணி நேரம் மற்றும் 6 நிமிடங்கள் நீடித்தது. இதனையடுத்து வரும் ஜூலை 27ல் ( ஒரு சில பகுதிகளில் 28ம் தேதி) இதே போன்றதொரு மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ இருப்பதாகவும், இது இந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணமாக இருக்கும் என்றும் வானியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக ஒரு மணிநேரம் மற்றும் 43 நிமிடங்களுக்கு இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என்றும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட உலகின் கிழக்கு கோளப் பகுதிகளிலும், தென் அமெரிக்காவிலும் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று கூறியுள்ளனர்.
இந்த நூற்றாண்டில் ஒரு முறை மட்டுமே நிகழக்கூடிய இந்த அரிய நிகழ்வைக் காண சிறப்பு ஏற்பாடுகளை உலகம் முழுவதும் உள்ள வானியல் மையங்கள் பார்வையாளர்களுக்கு செய்து தர உள்ளன.