கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழலில், குதிரை பேர அணி மாற்றத்தை தடுக்க, தனது கட்சி எம்எல்ஏக்களை நட்சத்திர விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் யாருக்கு அழைப்பு விடுப்பார், என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியான நிலையில், கட்சியினர் அணி மாறுவதை தடுக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பெங்களூரு அருகேயுள்ள பிடதி என்னுமிடத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், 78 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 66 பேரை, இந்த விடுதியில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக, அங்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று இரவுக்குள், நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.