திங்கள், 21 மே, 2018

நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? May 21, 2018

Image

நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்... 

1998-1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நிபா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள நிபா என்ற கிராமத்தில் இவ்வகை வைரஸ் கிருமித் தொற்றுடன் ஒருவர் கண்டறியப்பட்டதால், இந்த வைரஸுக்கு நிபா என்று பெயரிடப்பட்டது. 

பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரஸ், பன்றிகளுக்கும், பன்றிகளின் இருப்பிடத்தை சுத்தம் செய்தபோது மனிதர்களுக்கு பரவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. வவ்வால்களின் உடலை இருப்பிடமாக கொண்டுள்ள நிபா வைரஸ், அதன் சிறுநீர், மலம், உமிழ் நீர் மூலமாக, நாய், பூனை, ஆடு, பன்றி, குதிரை போன்றவற்றிற்கு பரவுகிறது. பின்னர் அந்த வைரஸ், வளர்ப்புப் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. 

நிபா வைரஸ் தாக்கிய நபருக்கு, காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா நிலை ஏற்படும். பின்னர் என்செஃபாலிட்டிஸ் எனும் மூளைக்காய்ச்சல் நோயை உருவாக்கி மனிதருக்கு மரணத்தை ஏற்படுத்துகிறது. நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரில் 74.5 சதவிகிதம் பேர் மரணத்தை தழுவியுள்ளனர். 

நிபா வைரஸ் தாக்குதலை குணப்படுத்த மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே நோயாளியை குணப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2004-ம்  ஆண்டு வங்கதேசத்தில் ஃபரித்புர் மாவட்டத்தில் வௌவால்கள் தங்கிய பனை மரத்திலிருந்து எடுக்கப்பட்ட பதநீர் மற்றும் கள்ளை பருகிய மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.